இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் – வலுவான நிலையில் இங்கிலாந்து
இலங்கை – இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பல்லேகெலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலி்ல் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் சேர்த்தது. பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருணாரத்னே (63), தனஞ்ஜெயா டி சில்வா (59), ரோஷென் சில்வா (85) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 336 ரன்கள் குவித்தது.
இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 46 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 46 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்று முன் தினம் 2-வது நாள் ஆட்டம் முடிவதற்கு ஒரு ஓவர் மட்டுமே இருந்ததால் ஜேக் லீச் தொடக்க வீரராக ரோரி பேர்ன்ஸ் உடன் களம் இறங்கினார்.
நேற்றைய முன் தினம் 2-வது நாளில் இங்கிலாந்து ரன் ஏதும் எடுக்கவில்லை. நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லீச் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோரி பேர்ன்ஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஜென்னிங்ஸ் 26 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் 146 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 124 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (0), ஜோஸ் பட்லர் (34), மொயீன் அலி (10), சாம் குர்ரான் (0), அடில் ரஷித் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் அரைசதம் அடிக்க, இங்கிலாந்து 76 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. பென் போக்ஸ் 51 ரன்னுடனும், ஆண்டர்சன் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். அகிலா தனஞ்ஜெயா 6 விக்கெட் வீழ்த்தினார்.
இங்கிலாந்து தற்போது வரை 278 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் 22 ரன்கள் அடித்தால் 300 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயித்தால் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.