Tamilசெய்திகள்

கர்நாடக மாநிலம் முழுவதும் புகைப்பிடிக்க தடை!

கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் நகர மேம்பாட்டு துறை மந்திரி யு.டி.காதர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் உள்ள அம்சங்களை மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான விடுதி, உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஏற்கனவே புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. விமான நிலையங்களில் வரி இல்லாத கடைகளில் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டு உள்ளது. புகையிலை பொருட்கள், மதுபானம் மீதான வரி சலுகையை திரும்ப பெற அரசு ஆலோசித்து முடிவு எடுக்க இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மாநில அரசு கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 30-க்கும் அதிகமான இருக்கைகள் இருக்கும் மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளில் புகைப்பிடிக்க தனியாக இடம் ஒதுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும் அங்கு 18 வயது நிரம்பாதவர்கள், புகைப்பழக்கம் இல்லாத பொதுமக்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். புகைப்பிடிக்க ஒதுக்கும் இடத்தில் மதுபானம், அனைத்து வகையான தின்பண்டங்களை விற்கக்கூடாது. தனியாக இடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, தீயணைப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதை மீறினால் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *