இரவில் 6 மணி நேரம் தூங்கினால் பரிசு!
சமீப காலமாக பொதுமக்கள் இரவில் தூங்கும் நேரம் குறைந்து வருகிறது. அவர்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களால் மறுநாள் காலை கவனத்துடன் வேலையில் ஈடுபட முடியவில்லை, இதனால் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உற்பத்தியும், வேலையும் பாதிப்பு அடைகிறது.
இதைத் தடுக்கும் வகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கிரேசி இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் புதுவிதமான திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் கூறுகையில், ஊழியர்களின் செல்போனில் ஒரு ஆப்ஸ் பதிவேற்றம் செய்யப்படும். ஊழியர்கள் ஆன் செய்து வைத்துத் தூங்கும்போது, அந்த ஆப்ஸ் தூங்கும் ஊழியர்களைக் கண்காணிக்கும். நாள் ஒன்றுக்கு இரவில் 6 மணிநேரம் அயர்ந்து தூங்கும் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.
இதன்மூலம், ஊழியர்களின் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது. ஊழியர்கள் தூங்குவதற்கு பரிசளிப்பதுடன் நாங்கள் நின்று விடுவதில்லை.
சிறந்த சத்துள்ள உணவு, உடற்பயிற்சிகள் செய்யவும் அறிவுறுத்துகிறோம், அலுவலகத்தில் எப்போதும் அன்பான, மகிழ்ச்சியான சூழல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். விடுமுறை நாளில் அவர்களைச் சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்கிறோம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.