தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும் இதற்கான பணி 2018-19-ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து மணிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, திருச்செந்தூரில் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள ஆதித்தனார் கல்லூரி அருகே சிவந்தி அகாடமி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.
விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாபா பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதேநேரத்தில் திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாலை மலர் நிர்வாக இயக்குனர் சிவந்தி ஆதித்தன், ஆதவன் ஆதித்தன் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.