மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் – சிவராஜ் சிங் சவுகான்
பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஓட்டு போட்டனர்.
வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், புத்னியில் உள்ள நர்மதா நதிக்கரைக்கு குடும்பத்தினருடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இதையடுத்து வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ் சிங் சவுகான், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என 100 சதவீதம் உறுதியாக நம்புவதாக கூறினார். 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்திருப்பதாகவும், இதற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் பணியாற்றி வருவதாகவும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், மற்ற பகுதிகளில் மாலை 5 மணிக்கும் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. டிசம்பர் 11-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.