Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் பெற்றால் அரசியலை விட்டு விலகுகிறேன் – செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய அ.தி.மு.க. அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு இன்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

முட்டிப்போட்டு முதல்வரான எடப்பாடி பழனிசாமி தற்போது வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார். நன்றி விசுவாசத்திற்கும், விருந்து உபசரணைக்கும் பெயர் போன பகுதி மேற்கு மண்டலம். ஆனால் சசிகலா, தினகரனால் முதல்வரான எடப்பாடி பழனிசாமி அவர்களை கட்சியில் இருந்து நீக்கி துரோகம் செய்து அந்த மண்ணுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார்.

சசிகலா, டி.டி.வி. துணையில்லாமல் நாங்கள் அமைச்சர் பதவிக்கு வந்தோம் என்று தங்கமணியும், வேலுமணியும் கோவிலில் சாமி முன்பு சத்தியம் செய்யட்டும். நான் சூடனை அணைத்து சத்தியம் செய்கிறேன். 100 தடவை சசிகலாவின் காலில் விழுந்தவர் தங்கமணி. 1½ கோடி உறுப்பினர்கள் உள்ள அ.தி.மு.க.வில் இப்போது 40 முதல் 50 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

தமிழக மக்களுக்கு பிடிக்காத திட்டங்களை திணிக்கும் மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு துணை நிற்கிறது. வருகிற 8-ந்தேதி வேலாயுதம்பாளையத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று பேசுகிறார். அதன்பிறகு ஓரிரு நாட்களில் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்து விடும்.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பெற்றால் நான் அரசியலை விட்டே விலக தயார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *