X

ஆதார் குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, செல்போன் இணைப்பு, மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதற்காக காலக்கெடுவும் விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த மனுக்களை இணைத்து தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

அதன்பின்னர் வாரம் 3 நாள் விசாரணை என்ற அடிப்படையில் 38 நாட்கள் தொடர் விசாரணை நடந்தது. கடந்த மே மாதம் விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள், இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று இடைக்கால தடை விதித்தனர்.

விசாரணை முடிவடைந்து 4 மாதங்கள் ஆன நிலையில், இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏகே சிக்ரி, கான்வில்கர் ஆகிய மூன்று நீதிபதிகளும் ஆதார் செல்லும் என தீர்ப்பு வழங்கி உள்ளனர். மூன்று நீதிபதிகள் சார்பாக நீதிபதி ஏகே சிக்ரி தீர்ப்பை வாசித்தார்.

‘சிறப்பானது என்பதை விட கருத்து அதன் தனித்துவம் முக்கியமானது. சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதார் வலுவூட்டுவதுடன் அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் அளிக்கிறது. ஆதாரை போலியாக தயாரிக்க முடியாது. எனவே, இது மற்ற அடையாள அட்டைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. எனவே, ஆதார் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது. ஆனால் அதில் சிறு திருத்தங்கள் செய்ய வேண்டும். ஆதார் எண்களை தனியார் நிறுவனங்கள் கேட்க முடியாது. தேச பாதுகாப்புக்கு மட்டுமே ஆதாரை பயன்படுத்த வேண்டும்’ என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மற்ற நீதிபதிகளான சந்திரசூட் மற்றும் ஏ.பூஷன் ஆகியோர் தனிப்பட்ட கருத்துக்களை எழுதி உள்ளனர்.

அடுத்த வாரம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வுபெற உள்ள நிலையில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.