மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திரபாண்டி மதுரை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நவம்பர் 6-ந்தேதி தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் மதுரையில் 5-க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியானது.
ஆன்லைனில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.500 முதல் 1000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தேன். ஆனால் அரசு விதிகளை பின்பற்றாமல் பலமடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. ஆகவே அது தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதி கேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தனி நபர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி விதிக்குட்பட்ட கட்டணத்தை வசூலித்து அந்த நபர்கள் மூலம் பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்ட விரோதமாக இதுபோல கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘சர்கார்’ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் நவம்பர் 6 முதல் 16-ந் தேதி வரையில் மதுரை மாவட்ட திரையரங்குகளின் தினசரி கட்டண வருவாய் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.