தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள ஒரு துணிக்கடையில் ஒரு புடவை 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இதனால் கடை திறப்பதற்கு முன்பாகவே அதிகாலை முதல் அந்த கடையில் பெண்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல பெண்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே காலை 8 மணிக்கு துணிக்கடை திறக்கப்பட்டது. அப்போது வரிசையில் காத்து நின்ற பெண்கள் ஒரே நேரத்தில் கடைக்குள் நுழைய முயன்றனர். இதனால் அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது.
பெண்கள் ஒருவருக் கொருவர் அடிதடியிலும் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து அந்த துணிக்கடையை போலீசார் மூடினர். இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் விளம்பரங்களை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளரை போலீசார் எச்சரித்தனர். கடை முன்பு திரண்டிருந்த பெண்களுக்கும் போலீசார் அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.