‘சண்டக்கோழி’ படத்தில் தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக வில்லனை எதிர்த்து போராடும் விஷால், சண்டக்கோழியின் இரண்டாம் பாகமான இந்த ‘சண்டக்கோழி 2’ வில் ஊர் பிரச்சினைக்காக வில்லன் கோஷ்ட்டியை எதிர்த்து போராடுவது தான் கதை.
ஏழு ஊர் ஒன்றாக சேர்ந்து நடத்தும் கோவில் திருவிழாவில் நடைபெறும் கரி விருந்தில், தனது இலையில் கரி கம்மியாக வைத்ததனால் ஒருவர் கோபப்பட, அதை தொடர்ந்து எழும் பிரச்சினை ஒருவரது உயிரையே பலி வாங்கிவிடுகிறது. கரிக்காக மனுஷன் உயிரையே எடுத்துட்டாங்களே, என்று கோபப்படும் இறந்தவரின் குடும்பத்தார் பழிக்கு பழியாக, வரலட்சுமியின் கணவரை வெட்டி சாய்க்க, பதிலுக்கு அவங்க வம்சத்தில் இருக்கும் அத்தனை ஆண்களையும் வெட்டி சாய்க்கும்படி வரலட்சுமி உத்தரவிடுகிறார். இதனால் திருவிழாவையே கொலைக் களமாக மாற்றும் வரலட்சுமி குடும்பத்தார் தங்களது பழியை தீர்க்க அந்த குடும்பத்தில் இருக்கும் அத்தனை ஆண்களையும் வெட்டி வீழ்த்த, இறுதியாக இருக்கும் ஒரு இளைஞரை கொலை செய்யும்போது அங்கு எண்ட்ரியாகும் ஊர் பெரியவரான ராஜ்கிரண் அவரை காப்பாற்றி விடுகிறார். எப்படி இருந்தாலும் அந்த இளைஞரை கொலை செய்தே தீருவோம், என்று வரலட்சுமி கோஷ்ட்டி காத்திருப்பதால், அந்த ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு அரசு தடை விதித்து விடுகிறது.
இதனால், 7 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருக்க, அந்த ஏழு ஊருக்கு சேர்த்து கிடைக்க வேண்டிய பல சலுகைகளும் கிடைக்காமல் போக, மீண்டும் திருவிழாவை நடத்த ராஜ்கிரண் முடிவு செய்கிறார். அதே சமயம், வரலட்சுமி அண்ட் கோவும், திருவிழாவில் தங்களது பழியை தீர்த்துக்கொள்ள தீவிரம் காட்ட, தனது உயிரை கொடுத்தாவது அந்த இளைஞரை காப்பேன் என்று சபதம் ஏற்கும் ராஜ்கிரண், அந்த இளைஞரை தண்ணுடனே தங்க வைத்துக் கொள்கிறார்.
இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் விஷால், தனது ஊரில் நடந்த பிரச்சினை குறித்து கேள்விப்பட்டதோடு, தனது அப்பாவின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அந்த இளைஞருக்கு பாதுகாப்பாக இருப்பதோடு, கீர்த்தி சுரேஷுடன் காதல், அப்பாவின் எதிரிகளுடன் மோதல் என்று மாஸாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே, வில்லன் கோஷ்ட்டியினால் ராஜ்கிரண் தாக்கப்பட்டு உயிருக்கு போராட, ராஜ்கிரண் இடத்தில் இருந்து திருவிழாவை வெற்றிகரமாக முடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகும் விஷல், தனது அப்பாவின் நிலையை ஊர் மக்களிடம் மறைத்து, திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதோடு, வரலட்சுமி கோஷ்ட்டியினரிடம் இருந்து அந்த இளைஞரை எப்படி காப்பாற்றுகிறார், என்பது தான் ‘சண்டக்கோழி 2’ படத்தின் கதை.
‘சண்டக்கோழி’ படத்தில் இருந்த அதே விறுவிறுப்பும், வேகமும் இந்த ‘சண்டக்கோழி 2’விலும் இருந்தாலும், அதில் இருந்த குடும்ப எப்பிசோட் இதில் மிஸ்ஸிங். கலகலப்பான பெண்களின் சிரிப்பும், அவர்களது பேச்சையும் குறைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஒரே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையாகவே இருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும், படத்தின் பெரும்பாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் திருவிழா எப்பிசோட், நம் மனதிலும் திருவிழாவில் பங்கேற்ற உற்சாகத்தைக் கொடுக்கிறது.
தலைப்புக்கு ஏற்றவாறு சண்டைக்காட்சிகளில் சீரிப்பாயும் சண்டைகோழியாக வலம் வரும் விஷால், தனது புகழ் பாடாமல், தனது அப்பாவான ராஜ்கிரனின் புகழ்பாடி தன்னடக்கத்தோடு நடித்திருப்பவர், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
காதல் காட்சிகள் மட்டும் தான் இல்லை, மற்றபடி ராஜ்கிரணும் படத்தின் ஹீரோவாகவே வலம் வருகிறார். அவருக்கும் சில ஆக்ஷன் காட்சிகளும், அமர்க்களமான டயலாக்கும் இருப்பதோடு, அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருக்கின்றனர்.
ஹீரோயின் கீர்த்தி சுரேஷ், முதல் முறையாக கிராமத்து பின்னணியில் நடித்திருக்கிறார். அதனால், நடிப்பில் வித்தியாசத்தைக் காட்ட முயற்சித்திருப்பவர், சில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கை கொடுத்து ரசிகர்களை எரிச்சலடைய செய்துவிடுகிறார். இருந்தாலும், இந்த படத்தில் அவரது அழகு கூடியிருப்பதோடு, ஆளும் நல்லா பளபளப்பாக இருக்கிறார்.
பார்வையினாலேயே பயமுறுத்தும் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கும் வரலட்சுமியின் கதாபாத்திரமும், அதை அவர் கையாண்ட விதமும் மிரட்டலாக இருக்கிறது.
படம் முழுவதும் ஆக்ஷன் மூடில் இருந்தாலும், அவ்வபோது கஞ்சா கருப்பு – முனிஷ்காந்த் கூட்டணியின் காமெடிக் காட்சிகள் சற்று ஆறுதலை கொடுக்கிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான் என்றாலும், பின்னணி இசை சூப்பர் ரகமாக இருக்கிறது. சக்திவேலின் ஒளிப்பதிவு திருவிழாவில் கலந்துக்கொள்ளும் அனுபவத்தை படம் பார்ப்பவர்களுக்கும் கொடுப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளில் வீசும் அனலையும் நாம் உணரும்படி செய்கிறது.
ஆக்ஷனை மட்டுமே மையப்படுத்தாமல், அப்பா – மகன் செண்டிமெண்டையும் டார்க்கெட் செய்திருப்பது படத்தின் ஸ்பெஷலாக இருப்பது போல, பல நட்சத்திரங்களை வைத்து, ஒரு திருவிழா காட்சியை எடுப்பதே பெரும் சிரமம் என்றால், பெரும்பாலான காட்சிகள் திருவிழாவிலே நடக்க, அதில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் என்று படத்தின் பிரம்மாண்டம் வியப்படைய செய்கிறது. அதேபோல், திருவிழா காட்சிகள் அனைத்தும், நிஜமகாவே திருவிழாவில் எடுத்தது போல் இருப்பது, படத்தினுள் ரசிகர்களை ஐக்கியமாக்கி விடுகிறது.
படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தாலும், அவை நீளமாக அல்லாமல் ஷாட் அண்ட் ஷார்ப்பாக இருப்பது ரசிகர்களுக்கு ஸ்வீட் சுவைத்த அனுபவத்தைக் கொடுப்பதோடு, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் வேகமான காட்சிகள் முழு படத்தையும் பர்பெக்ட்டான கமர்ஷியல் படமாக்கிவிடுகிறது.
மொத்தத்தில், இந்த ‘சண்டக்கோழி 2’ ஆக்ஷன் திருவிழாவாக மட்டும் இன்றி ஆடியன்ஸை திருப்திப்படுத்தும் அமர்க்களமான திருவிழாவாகவும் இருக்கிறது.
-ஜெ.சுகுமார்.