கருப்பு ஆடுகளினால் தான் அந்த பிரச்சினை வருகிறது – சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான யு டர்ன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கச்சிதமான திரைக்கதையும், பட உருவாக்கமும் படத்தை வெற்றிபெறச் செய்தன. பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சமந்தா இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருவதும் வெற்றிக்கான முக்கிய காரணமாக உள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த சீமராஜா திரைப்படமும் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகின்றன. திருமணத்திற்குப் பின் நடிப்பைக் கைவிட்ட நடிகைகள் மத்தியில் சமந்தா தன் வேகத்தை குறைத்துக் கொள்ளாமல் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சமந்தா, ‘நான் திரைத்துறையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். ஒரு நடிகரைத்தான் திருமணம் செய்திருக்கிறேன். சினிமாதான் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது. அதை நான் கடவுளாக மதிக்கிறேன்.
எனக்கு பாலியல் தொந்தரவு இருந்ததில்லை. நல்ல நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்கள் படங்களில் இரண்டு மூன்று முறை தொடர்ந்து நடித்திருக்கிறேன். எல்லாத்துறைகளிலும் ஒரு கருப்பு ஆடு இருக்கிறார்கள். அவர்களால் அந்த துறையே கெட்டுப் போகிறது. அதுபோல் சினிமாத்துறையிலும் இருக்கிறார்கள். அவர்களால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது’ என்றார்.