இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
கவுகாத்தியில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 322 ரன் இலக்கை எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் விராட்கோலி, ரோகித் சர்மா, சதம் அடித்தனர். இந்திய அணியில் பேட்டிங் வரிசை பலம் பொருந்தியதாக உள்ளது. அதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிக்காக போராடும் என்பதால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதற்கிடையே ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க தொடக்க வீரர் ரோகித்சர்மாவுக்கு வாய்ப்பு உள்ளது. டெண்டுல்கர் 463 போட்டியில் 195 சிக்சர்கள் அடித்துள்ளார். அவரது சாதனையை முறியடிக்க ரோகித்சர்மாவுக்கு இன்னும் இரண்டு சிக்சர் மட்டுமே தேவை.
ரோகித் சர்மா 189 போட்டியில் 194 சிக்சர் அடித்து இருக்கிறார். எனவே ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா இன்று படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் வீரர் அப்ரிடி முதலிடத்தில் உள்ளார். அவர் 398 போட்டியில் 351 சிக்சர்களை விளாசி உள்ளார்.