சபரிமலைக்கு பெண்களை அனுமதித்த விவகாரம் – டெல்லியில் போராட்டம் நடத்திய பெண்கள்
சபரிமலைக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
வழிபாட்டு முறையில் தலையிடும் இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினர் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கேரளாவில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஐயப்ப நம ஜப யாத்ரா எனும் ஐய்யப்ப பக்தர்கள் அமைப்பு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தீர்ப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளை நிற சேலை அணிந்த திரளான பெண்கள் தீர்ப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. சங்க தலைவர் ஷியலஜா விஜயன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கோவில் ஆகம விதிகள் மற்றும் தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகளை சுட்டிக் காட்டியிருப்பதுடன், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.