சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல 539 பெண்கள் முன்பதிவு!
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக வருகிற 16-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி இங்கு தரிசனம் செய்வதற்காக 539 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 2 முறை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த இளம்பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அய்யப்பன் கோவில் வளாகத்தில் முதல் முறையாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். கோவிலுக்கு வரும் இளம்பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
17-ந் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும். பின்னர் கோவில் நடை சாத்தப்படும். 3 நாள் இடைவெளிக்கு பின் மீண்டும் கோவில் நடை டிசம்பர் 30-ந் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 20-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். முன்னதாக ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடக்கிறது.
மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி கேரளா மட்டும் அல்லாமல் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் தரிசனத்துக்காக வருவார்கள். அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்காக அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் மண்டல, மகர விளக்கு பூஜையில் கலந்துகொள்ள ஏராளமான இளம்பெண்கள் வர வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே கேரள போலீஸ் துறை சார்பில் சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. அப்படி முன்பதிவு செய்யும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த முன்பதிவு தரிசனத்திற்கு பக்தர்கள் இடையே அமோக வரவேற்பு உள்ளது. எனவே முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு பூஜையில் கலந்துகொள்ள இதுவரை 3½ லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அதிலும் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ள நிலையில் இதுவரை 539 இளம்பெண்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த பெண்கள் அனைவரும் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டல, மகரவிளக்கு பூஜையின் போதும் இளம்பெண்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
எனவே கேரள அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறது.