சபரிமலையில் பக்தர்கள் கைது – முதல்வர் அலுவலகம் முன்பு பா.ஜ.க போராட்டம்
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் பாரபட்சமின்றி வழிபாடு நடத்த அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என்று மாநில அரசு உறுதிபட கூறியதுடன், சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சபரிமலை கோவிலில் நேற்றிரவு நடை சாத்தப்பட்ட பிறகு பக்தர்கள் சிலர் ஐயப்பா சரணம் என்ற பாடலை சத்தமாக பாடிக்கொண்டு நடைபந்தலிலேயே தங்கினர். அவர்களை வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர். பக்தர்கள் வெளியேறாததால் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி தகவல் பரவியதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இன்று அதிகாலை முதலே திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் அருகே திரண்டு போராட்டம் நடத்தினர். அதேசமயம் அரன்முலா, கொச்சி, கொல்லம், ஆலப்புழா, ரன்னி,தொடுபுழா, கலாடி, மலப்புரம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்ட பக்தர்கள் ஆயுதப்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அங்கும் சென்று போராட்டக்குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட ஐயப்ப பக்தர்களை உடனடியாக விடுவிக்கும்படி போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். கேரளாவில் நெருக்கடி நிலை போன்ற சூழ்நிலை நிலவுவதாகவும் குற்றம்சாட்டினர்.