Tamilசெய்திகள்

ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க தயாரான உக்ரைன்! – 30 நாட்களுக்கு ராணுவ சட்டம்

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று முன்தினம் கைப்பற்றியது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்திருக்கிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் அசோவ் கடற்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், உக்ரைனின் ரஷ்ய எல்லையில் உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய ராணுவச் சட்டத்தை அமல்படுத்த உக்ரைன் அரசு முடிவு செய்தது. இதற்காக பாராளுமன்றத்தில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவை நிறைவேற்ற 226 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மசோதாவிற்கு ஆதரவாக 276 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள மோல்டோவாவின் டிரான்ஸ்னிஸ்டிரியா பிராந்தியம் மற்றும் கருங்கடல் ஓரம் உள்ள பிராந்தியங்கள் மற்றும் அஸோவ் கடல் பகுதியில் இந்த சட்டம் அமலில் இருக்கும். இந்த பிராந்தியங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிளவுபட்ட பிராந்தியமான டிரான்ஸ்னிஸ்டிரியாவில் ரஷ்ய படைகள் முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலில் 60 நாட்களுக்கு ராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆணையில் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கையெழுத்திட்டார். அதன்பின்னர், 30 நாட்களாக குறைத்தார்.

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் கூறுகையில், ‘ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் போர் பிரகடனம் என்று அர்த்தம் அல்ல. உக்ரைன் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *