சிரியாவுக்கு உயர்தொழில்நுட்ப எஸ்-300 ரக ஏவுகணைகளை வழங்கும் ரஷியா!

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன.

இந்த பதற்றமான சூழ்நிலையில், சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் கடந்த 17-ம் தேதி ரஷியாவுக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், விமானத்தில் பயணம் செய்த 15 ரஷிய ராணுவ வீரர்கள் பலியாகினர். இதைத்தொடர்ந்து, தங்கள் நாட்டின் விமானம் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என ரஷியா முதலில் குற்றம் சாட்டியது.

ஆனால், தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்கு இஸ்ரேல் விமானிகள் ரஷிய விமானங்களை கேடயமாக பயன்படுத்தி வந்துள்ளதாகவும், விமானம் வீழ்த்தப்பட்ட லடாக்கியா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் முன்னறிவிப்பின்றி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அச்சமயம் அந்த பகுதி வழியாக வந்த ரஷிய விமானம் சிரியா ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது என விசாரணைக்கு பின்னர் ரஷியா தெரிவித்தது.
எனினும், இந்த விபத்துக்கு இஸ்ரேல் தான் பொறுப்பேற்க வேண்டும் என சிரியா மற்றும் ரஷியா வலியுறுத்தியது. ஆனால் இதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதற்கிடையே, சுமார் 300 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து சென்று எதிரி ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் திறன் கொண்ட உயர்தொழில்நுட்ப எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கி சோய்கு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 2016-ம் ஆண்டு இவ்வகை ஏவுகணைகளை சிரியாவுக்கு வழங்க ரஷிய முயன்ற போது, இந்த ஏவுகணைகளை எங்கள் நாட்டிற்கு எதிராக சிரியா பயன்படுத்தக்கூடும் என இஸ்ரேல் கோரிக்கை தெரிவித்ததால் அந்த முடிவை ரஷியா கைவிட்டதை நினைவு கூற வேண்டும்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை நேற்று தொடர்புகொண்டு பேசிய ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், ‘ சிரியாவிற்கு எஸ்-300 ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளோம். சிரியாவில் உள்ள ரஷிய ரணுவ வீரர்களின் உயிர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், ’ ரஷியாவின் இந்த முடிவு இஸ்ரேல் பிரதமருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியா போர் விமானம் சுட்டு வீழத்தப்பட்டத்தற்கு பொறுப்பேற்க வேண்டியது சிரியா ராணுவம் தான். ஆனால், இவ்விவகாரத்தில் அங்கள் மீது ரஷியா குற்றம்சாட்டுகிறது.

உயர்தொழில்நுட்ப ஏவுகணைகள் பொறுப்பற்றவர்களின் கைகளில் கிடைத்தால், அதை அவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும். எனவே, ரஷியாவின் முடிவால் இந்த பிராந்தியம் அச்சுருத்தலுக்கு உள்ளாகியுள்ளது’. என குறிப்பிட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools