விமர்சனங்களை கண்டுக்கொள்வதில்லை – இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-4 என்ற கணக்கில் பறிகொடுத்த பிறகு தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
நான் இப்போது நன்றாக தூங்குகிறேன். ஒரு சில நாளேடுகளில் உங்களை பற்றி அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி விமர்சித்து இருக்கிறார் என்று கேட்கிறீர்கள். இது போன்ற செய்திகளை பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. படிப்பதும் இல்லை. எனக்கு தூங்குவதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது. தேவைப்படும் போது டுவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் எனது கருத்துகளை பதிவிடுகிறேன். யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாமல் 100 சதவீதம் நமது வேலையை சரியாக செய்தால் போதும். இது போன்ற விமர்சனங்களால் கலங்கினால், அதன் பிறகு குழப்பத்திற்கு தான் உள்ளாக நேரிடும்.
அதனால் தான் இவற்றை நான் தவிர்த்து விடுகிறேன்.ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு ஓய்வு அளித்தது குறித்து கேட்கிறீர்கள். அவர் களம் இறங்கினால் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது தெரியும். ஆனால் அவருக்கு மனரீதியாக ஓய்வு அவசியமாக பட்டது. அதனால் தான் ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்த ஓய்வுக்கு பிறகு அவர் புத்துணர்ச்சியுடன் வருவார்.