இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின் மீனவர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டு நேற்று கடலுக்கு புறப்பட்டனர்.
ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசைப்படகுகளில் சென்றனர்.
இதில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 8 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் இங்கு மீன் பிடிக்கக்கூடாது எனக்கூறி எச்சரித்தனர்.
மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறிய அவர்கள் வலை, மீன்பிடி சாதனங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியதோடு ஏற்கனவே பிடித்திருந்த மீன்களையும் பறித்துக் கொண்டனர்.
தொடர்ந்து இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கி ‘இங்கிருந்து செல்லுங்கள் இல்லையென்றால் சிறை பிடிக்கப்படுவீர்கள்’ என எச்சரித்தனர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் மீன் பிடிக்காமல் பாதியிலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.
இது குறித்து ராமேவரம் மீனவர்கள் கூறுகையில், வேலை நிறுத்தத்திற்கு பின் நேற்று தான் கடலுக்கு சென்றோம். இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து எங்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என வருத்தத்துடன் கூறினர்.