ராமர் கோவில் கட்டும் விவகாரம் – பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்கும் சிவசேனா

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், சிவசேனா கட்சியும் வலியுறுத்தி வருகின்றன. பா.ஜனதாவும் ராமர்கோவில் கட்டுவதில் ஆர்வமாக உள்ளது. அண்மையில் இதே கோரிக்கையை முன்வைத்து தனிப்பட்ட முறையில் சிவசேனா அயோத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

இந்தநிலையில் கடந்த 4½ ஆண்டுகளில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிவசேனா தனது கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் கடுமையாக விமர்சித்து உள்ளது.

அந்த பத்திரிகையின் தலையங்கத்தில் இதுபற்றி கூறப்பட்டு இருப்பதாவது:-

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது ஒருவர்(மோடி) தனக்கு 56 அங்குல மார்பளவு இருப்பதாக கூறினார். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். இதனால் காங்கிரசை தேர்தலில் மக்களால் தூக்கி எறிந்துவிட்டு 56 அங்குல மார்பளவு கொண்ட மனிதரிடம் நிர்வாகத்தின் சாவியை ஒப்படைத்தனர்.

ஆனால் அவரிடம் அரசியல் திறமை இல்லை. இதனால்தான் ராமர் கோவில் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

விரைவில் நடக்கப்போகும் தேர்தலில் மக்கள் உங்களின் மார்பளவை மீண்டும் அளக்கப் போகிறார்கள். அப்போதும் ராமர் வனவாசத்தில் இருக்க நேர்ந்தால் உங்கள் அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துவிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ராமர் கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு காங்கிரஸ் மறைமுக நெருக்கடி அளிப்பதாக மோடி குற்றம்சாட்டி இருப்பதற்கும் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

‘‘இந்திராகாந்தி குடும்பம் மற்றும் காங்கிரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுவதை நீங்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும். இதுபோன்று புகார்களை கூறுவதற்காக ஆட்சியை மக்கள் உங்களிடம் ஒப்படைக்கவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரசும், சமாஜ்வாடியும் முட்டுக்கட்டை போட்டதால்தான் அவற்றை அதிகாரத்தில் இருந்து மக்கள் அகற்றினர். எனவே இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்.

இதில் ராகுல்காந்திக்கு முக்கியத்துவம் எதற்கு?… காங்கிரசுக்கு என்ன பலம் உள்ளது?… பிறகு ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். காங்கிரசை எதிர்ப்பதற்காக ராமர் கோவில் விவகாரத்தில் நாடகமாடினால் நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள். ராமர்கோவில் பா.ஜனதா அளித்த வாக்குறுதி’’ எனவும் சாம்னாவில் விமர்சிக்கப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools