X

வேதாரண்யத்தை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் – டாக்டர். ராமதாஸ் அறிக்கை

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வேதாரண்யத்தை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும், என்று பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கஜா புயலின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான நாகை மாவட்டம் வேதாரண்யம் உருத்தெரியாத அளவுக்கு நிலைகுலைந்து போயிருக்கிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் அதையொட்டிய பகுதிகளும் புயலால் புரட்டிப் போடப்பட்டுள்ளன. வரலாறு காணாத சேதங்களை எதிர்கொண்டுள்ள அப்பகுதி மக்கள் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கான வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

கஜா புயல் தாக்குதல் தொடுத்த வியாழக்கிழமை இரவு வரை தங்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று இந்த பகுதிகளின் மக்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். கஜா புயலின் நகர்வுகள் கணிக்க முடியாததாக இருந்ததாலும், அதன் திசையும், வேகமும் அடிக்கடி மாறியதாலும் அது போக்கு காட்டி செயலிழந்து விடும் என்று தான் அனைத்துத் தரப்பினரும் நினைத்தனர்.

இது மக்கள் மத்தியில் சற்று அலட்சியத்தையும் கொடுத்தது. ஆனால், கஜா புயல் அனைவரின் கணிப்புகளையும் முறியடித்து கொடூரமானத் தாக்குதலை நடத்தியது. இதற்கு முன் பெரும் சேதத்தை ஏற்படுத்திய தானே மற்றும் வர்தா புயலுடன் ஒப்பிடும் போது கஜா புயலின் வேகம் குறைவு தான் என்றாலும் சேதம் பலமடங்கு அதிகம் என்பதை மறுக்க முடியாது.

காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் கூடுதலான மரங்கள் வேருடன் சாய்ந்திருக்கின்றன. அவற்றில் பெரும் பாலானவை தென்னை மரங்கள் ஆகும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவியிருந்த தென்னந் தோப்புகள் கஜா புயலால் தரைமட்டமாகி விட்டன.

காவிரி பாசன மாவட்டங்களின் மேற்கு பகுதிகளான வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டைப் பகுதிகளில் கடந்த சில பத்தாண்டுகளில் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு மாறிவிட்டனர். அவர்களின் ஒற்றை வாழ்வாதாரமாக உயர்ந்து நின்ற தென்னை மரங்கள் புயலில் சாய்ந்ததால், எதிர்காலம் கேள்விக் குறி ஆகியுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்த அப்பகுதி மக்கள் வாழ்க்கையையே இழந்தது போல் துடிக்கின்றனர்.

வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் அதையொட்டிய மக்களின் பொருளாதார பின்னணியை தெரிந்து கொண்டால் தான் அவர்களின் துயரத்தை உணர்ந்து கொள்ள முடியும். அப்பகுதி மக்களில் பெரும்பான்மையினர் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றியும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறிய அளவிலான தொழில் செய்தும் வருவாய் ஈட்டி சொந்த ஊரில் விளைநிலங்களிலும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பிலும் முதலீடு செய்வர்.

அத்தகைய முதலீடுகளில் இருந்து நிரந்தர வாழ்வாதாரம் கிடைக்கும் நிலை உருவானதும் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அவ்வாறு சொந்த ஊர்களில் நிரந்தர வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக பல ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து கடல் கடந்து சென்று உழைத்தும், சென்னை போன்ற நகரங்களில் வாழ்க்கையின் வசந்தங்களை இழந்து வாடியும் சேர்த்த அத்தனையையும் கஜா புயலில் தென்னை, வாழை மரங்கள் சாய்ந்ததாலும், கால்நடைகள் இறந்ததாலும் இழந்து தவிப்போர் ஆயிரமாயிரம் பேர்.

அவர்களில் பலர் 25 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பால் கிடைத்த பலனை இழந்துள்ளனர். அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.3000, ஒரு தென்னை மரத்துக்கு ரூ.110, கோழிக்கு ரூ.100, ஆட்டுக்கு ரூ.1000 என்ற அளவில் இழப்பீடுகளை வழங்கி ஈடு கட்ட முடியாது. அந்த இழப்பீட்டை வைத்துக் கொண்டு அவர்களால் எதையும் சாதிக்க முடியாது.

சேதமடைந்த நீண்ட மற்றும் மத்தியக் கால பயிர்களை மீண்டும் வளர்த் தெடுப்பதற்கு ஆகும் செலவையும், பயிர்கள் வருவாய்க் கொடுக்க ஆகும் காலம் வரை குறைந்தபட்ச வாழ்வாதார உதவிகளையும் வழங்குவதன் மூலம் தான் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார இழப்புகளை ஓரளவாவது சரிசெய்ய முடியும்.

இதற்காக புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து, அப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பன்னாட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைப் பெற்றுத் தர வேண்டும். இவற்றுக் கெல்லாம் மேலாக சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

குறிப்பாக, சென்னை- சேலம் 8 வழிச் சாலைக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் போது சாதாரண தென்னை மரங்களுக்கு ரூ.40 ஆயிரம் வீதமும், முதிர்ந்த தென்னை மரங்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதமும் இழப்பீடாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இப்போதும் அதே அளவு கோலின்படி சாய்ந்த தென்னை மரங்களுக்கும், பிற மரங்களுக்கும் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.