பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2005-ம்ஆண்டு வெளியான ‘ஆசிக் பனாயா ஆப்னே’ என்ற இந்தி படத்தின் மூலம் அவர் அறிமுகம் ஆனார்.
பல்வேறு படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து தனுஸ்ரீதத்தா பிரபலம் ஆனார். தமிழில் நடிகர் விஷாலுடன் இணைந்து ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானாபடேகர் மீது தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்குதலில் ஈடுபட்டார் என்று கூறினார்.
மேலும் தான் சினிமாவில் அறிமுகமாகும் போது டைரக்டர் விவேக் அக்னி கோத்ரி தன்னை ஆடைகளை களைந்துவிட்டு கதாநாயகன் முன்பு நடனமாட கூறியதாக தனுஸ்ரீதத்தா புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மராட்டிய நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்) கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மீது தனுஸ்ரீ தத்தா பாய்ந்து உள்ளார். குண்டர்களை அனுப்பி தன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை மாற்ற விரும்பிய ராஜ்தாக்கரே கிரிமினல் மனநிலை கொண்டவர். என்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர்தான் பின்னணியில் உள்ளார். குண்டர்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளார்.
ராஜ்தாக்கரே ஒரு குண்டர். அவரை போன்ற குண்டர்கள் தான் அந்த கட்சியில் உள்ளனர். பெண்களை தாக்கும் நபர் ஒரு தலைவராக இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தனுஸ்ரீ தத்தா கார் தாக்கப்படும் வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் ராஜ்தாக்கரே மீது அவர் இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.