நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படம் ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான காட்சிகளையும், வசனங்களையும் கொண்டு இருப்பதாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பியுள்ளன. மேலும், குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என அமைச்சர்கள் சிலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தமிழகம் முழுவதும் சர்கார் படத்துக்கு எதிராக வன்முறை செய்யப்படுகிறது. படத்தின் போஸ்டர்கள், கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை கிழித்தும், படத்தை திரையிட விடாமல் தடுத்தும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று மாலை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்வதற்காகவே போலீசார் சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தணிக்கை குழுவால் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு திரைப்படத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ‘தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.