ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம் – அடுத்த மாதம் தொடக்கம்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்பட்டன.

இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களுக்கு உடனடியாக உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

அதன் பிறகு மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

பின்னர் கடந்த ஜூலை மாதம் மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதற்காக உள்ளூரில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பற்றியும் ரஜினி மக்கள் மன்றத்தினர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளராக இளவரசன் நியமிக்கப்பட்ட பிறகு மன்றத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது. இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டனர்.

அவர்கள் புகார்களை நேரடியாக தலைமைக்கு அனுப்ப இயலாது. மாவட்ட செயலாளர்களுக்குதான் அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்டோபர் 5-ந்தேதி மற்றும் 11-ந்தேதிகளில் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டு 9 மாதங்கள் ஆன நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன.

எனவே அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாக ரஜினி மக்கள் மன்ற வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக பொதுமக்களிடம் சர்வே நடத்தப்பட்டதில் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே ரஜினி தனது அரசியல் பயண திட்டத்தை அடுத்த மாதமே தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *