பிரதமர் மோடி மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தும் ராகுல் காந்தி
ஆளும் மத்திய அரசின் மீது ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பான சர்ச்சைகளை தொடங்கி வைத்தவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. தற்போது, இந்த விவகாரத்தில் பாஜக – காங்கிரஸ் கட்சிகள் இடையே நடைபெற்று வரும் வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையே, மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எல் & எப்.எஸ்(IL&FS) எனும் நிறுவனம் திவாலாகாமல் தடுக்க பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் நிதியை அந்நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வழங்க முயற்சிக்கிறார் எனும் புதிய குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.
இந்த ஐ.எல் & எப்.எஸ் நிறுவனம் உள்கட்டமைப்புகளுக்கு கடன் சேவை அளிக்கும் முன்னனி நிறுவனமாகும், கடந்த 3 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் லாபம் 300 சதவிகிதம் குறைந்து திவாலாகும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :-
லைட்ஸ், கேமிரா, ஸ்கேம்(மோசடி) காட்சி 1 :-
பிரதமர் மோடி கடந்த 2007-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த சமயம் ரூ.71 ஆயிரம் கோடி மதிப்புடைய ‘கிப்ட் சிட்டி’ எனும் திட்டம் ஐ.எல் & எப்.எஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டத்தை செயல்படுத்த ஐ.எல் & எப்.எஸ் நிறுவனம் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை.
காட்சி 2 :-
ஐ.எல் & எப்.எஸ் நிறுவனம் இப்போது பெரும் கடன் சுமையில் சிக்கி திவாலாகும் நிலையில் உள்ளது. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி மற்றும் ஸ்டேட் பேங்கில் இருந்து ரூ. 91 ஆயிரம் கோடியை எடுத்து அந்நிறுவனத்தை காப்பாற்ற மோடி முயற்சி செய்து வருகிறார். நாட்டின் பாதுகாவலர் மாட்டிக்கொண்டார்.
பிரதமர் மோடி அவர்களே உங்களுக்கு மிகவும் பிடித்த ஐ.எல் & எப்.எஸ் நிறுவனம் திவாலாகப்போகிறது. அதை காப்பாற்ற எல்.ஐ.சி.யின் நிதியை பயன்படுத்த முயற்சி செய்கிறீர்கள். மோசடி பேர்வழிகளை காப்பாற்றுவதற்கு பொதுமக்கள் சிறுக சிறுக சேமித்து வைத்துள்ள எல்.ஐ.சி நிதியை பயன்படுத்துவது ஏன்?.
IL&FS என்பதை, ’நான் நிதி மோசடிகளை காதலிக்கிறேன்’ (ஐ லவ் ஃபினான்சியல் ஸ்கேம்) எனும் அர்த்ததில் நீங்கள் புரிந்துகொண்டீர்களா ?.
இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.