ரபேல் விமான முறைகேடு – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வினீத் தண்டா இன்று பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் செய்த ஒப்பந்தங்கள் குறித்த விரிவான விவரங்கள் மற்றும் விலை ஒப்பீடு தொடர்பான தகவல்களை சீலிட்ட கவரில் வைத்து மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், 10-ம் தேதி (நாளை மறுநாள்) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த பொதுநல வழக்கை விசாரிக்க உள்ளது.
இதேபோல் ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்துள்ள வழக்கும் நாளை மறுநாள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.