ரபேல் போர் விமான விவகாரம் – அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்

ரபேல் போர் விமானம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது.

இது சம்பந்தமாக பதில் அளித்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் போர் விமானம் கொள்முதல் தொடர்பாக எந்த விசாரணைக்கும் உத்தரவிட அவசியம் இல்லை என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, இந்த ஒப்பந்தம் மூலம் காங்கிரஸ் கட்சி கமி‌ஷன் பெறுவதற்கு முயற்சித்தது. அது நடக்காததால் தான் அவர்கள் ஆட்சி காலத்தில் ஒப்பந்தத்தை இறுதி செய்யாமல் இழுத்தடித்தார்கள்.

ஆனால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் வாங்குவதற்கு பேசிய தொகையை விட 9 சதவீதம் குறைவான விலையில் விமானத்தை வாங்குகிறோம் என்று கூறினார்.

இதற்கு முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் டுவிட்டர் தளத்தில் 3 கேள்விகளை எழுப்பி பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் செய்த விலையை விட 9 சதவீதம் குறைவு என்றால் காங்கிரஸ் ஆட்சியில் 126 விமானம் வாங்க முடிவு செய்திருந்த நிலையில் இப்போது 36 விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? குறைந்த விலையில் கிடைக்கும்போது ஏன் கூடுதலாக விமானம் வாங்கவில்லை.

இந்த ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பங்குதாரராக சேர்த்திருந்த நிலையில் அதை பாரதிய ஜனதா அரசு கைவிட்டது ஏன்?

எங்கள் ஆட்சி காலத்தில் 126 விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளும், விமானப்படையும் ஒப்புதல் அளித்ததற்கு பிறகு அந்த ஒப்பந்தத்தை பாரதிய ஜனதா அரசு ரத்து செய்தது ஏன்?

போர் விமானம் கொள்முதல் தொடர்பாக ஏன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாதுகாப்பு மந்திரி கேட்டிருக்கிறார். இந்த காரணங்களுக்காக விசாரணை நடத்த வேண்டும் என்று நான் இந்த 3 கேள்விகளை இப்போது கேட்டிருக்கிறேன். இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் ப. சிதம்பரம் கூறும்போது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கமி‌ஷன் பெறும் நோக்கத்தில் ஒப்பந்தத்தை முடிவு செய்யாமல் இருந்ததாக கூறியிருக்கிறார். இதுபோல பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எங்களிடம் அதை விட ஏராளமான கேள்விகள் இருக்கின்றன என்று கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools