X

ரபேல் போர் விமான விவகாரம் – மெளனத்தை கலைத்த பிரான்ஸ் அதிபர்

பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது அதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

அதை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மறுத்துள்ளது. இந்த நிலையில் ரபேல் விமானங்கள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களுக்கான டெண்டரை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்து இருந்தார்.

அது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் அது பற்றி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள அவர் இடைவெளியின் போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் புகார் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் ‘‘கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி பாரீஸ் வந்த போது ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் போட்டது. இது இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம்.

இந்த விவகாரத்தில் நான் மிக தெளிவாக இருக்கிறேன். இது 2 நாட்டு அரசுகளுக்கு இடையே விவாதிக்கப்பட்டது. அப்போது நான் அதிபர் பதவியில் இல்லை. கடந்த ஆண்டு மே மாதம் தான் நான் அதிபரானேன். இதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பே தெளிவாக கூறிவிட்டார்.

இதுகுறித்து வேறு எதுவும் என்னால் கூற முடியாது. ஏனெனில் நான் அப்போது பதவிலும் இல்லை. நாங்கள் மிக தெளிவான சட்ட திட்டங்களுடன் செயல்படுகிறோம்’’ என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.