X

ரபேல் விமான ஊழல் – பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்

தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பு பிரிவு தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரபேல் போர் விமானங்களை தன்னிச்சையாக வாங்குவதற்கு பிரதமர் மோடி எடுத்துள்ள முடிவில் தொடக்கம் முதல் தடுமாற்றங்களும் முறைக்கேடுகளும் நடைபெற்றுள்ளன. விமானங்களை வாங்கும் விலை தொடர்பான விவரங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை.

ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கான நெறிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழுவிடம் முன்னதாக பெற வேண்டிய ஒப்புதல் பெறப்படவில்லை.

பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.லை விலக்கி விட்டு சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம், போர் விமானங்களை உற்பத்தி செய்வதில் துளிகூட அனுபவம் இல்லாத பிரதமர் மோடியின் நெருக்கமான அம்பானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின் போது 2012 டிசம்பர் 12-ந்தேதி ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டது.

அதன்படி ஒரு விமானத்தின் விலை ரூ. 526 கோடி. மொத்தம் 36 விமானங்களுக்கு ரூ. 18 ஆயிரத்து 940 கோடி. ஆனால் மோடி அரசாங்கமோ, 36 ரபேல் விமானங்களை 60,145 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது.

இந்த விலை டஸ்ஸல்ட் ஏவியே‌ஷன் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை 2016-ல் இடம் பெற்றுள்ளது. மக்கள் பணம் ரூ. 41,205 கோடி ஏன் அதிகமாக கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது என்ற கேள்விக்கு பா.ஜ.க. விளக்கம் அளிக்குமா?

இதே டஸ்ஸல்ட் ஏவியேஷன் நிறுவனம் இன்னும் 2 நாடுகளுக்கு இதே ரபேல் விமானங்களை 2015-ல் விற்பனை செய்திருக்கிறது. எகிப்துக்கு 24 விமானங்கள், கத்தாருக்கு 24 விமானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவும் ஒரு விமானத்தின் விலை 1,319.80 கோடி ரூபாய்க்கு. அப்படி என்றால் இந்தியா மட்டும் ஏன் ஒரு விமானத்துக்கு ரூ. 1670.70 கோடி கொடுத்து வாங்க வேண்டும்.

ரபேல் போர் விமானங்கள் என்ன விலைக்கு வாங்கினோம் என்பதை வெளியிடத் துணிவில்லாத மோடி அரசு அவதூறுகளை பரப்பி வருகிறது. காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் போட்ட போர் விமானங்களை விட கூடுதலான தொழில்நுட்பம் கொண்டது. பா.ஜ.க. அரசு கொள்முதல் செய்கிற ரபேல் போர் விமானங்கள் என்று தங்களது ஊழல்களை மறைக்க பொய் மூட்டைகள் அவிழ்த்து விடுகின்றனர்.

ஆனால் உண்மையில் தொழில்நுட்பத்தில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை பிரான்ஸ் அரசே உறுதி செய்திருக்கிறது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் மோடி – நிர்மலா சீதாராமன் ஜால வித்தைகள் நாட்டு மக்களிடம் இனியும் எடுபடாது.

‘விலைகள் வெளியிடப்படக்கூடாது’ என்ற பிரிவை வைத்து மோடி அரசாங்கமும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் தவறான தகவல்களை தருகின்றன.

இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.

Tags: Rafale