X

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ் தலைவாஸ் – இன்று பெங்களுருடன் மோதல்

புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்டு தமிழ் தலைவாஸ் அணி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. தனது தொடக்க சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தான் மோதிய 22 ஆட்டத்தில் 6-ல் மட்டுமே வென்றது. கடைசி இடத்தை பிடித்து பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

இதைததொடர்ந்து இந்த ஆண்டுக்கான புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியில் வீரர்கள் தேர்வில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது.

சென்னையில் தொடங்கிய இந்த ஆண்டுக்கான சீசனில் முதல் லெக்கில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி எதிர் பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்சை 42-26 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வீழ்த்தியது.

ஆனால் அதை தொடர்ந்து 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. உபி. யோதாவிடம் 32-37 என்ற கணக்கிலும், தெலுங்கு டைட்டன்சிடம் 28-33 என்ற கணக்கிலும், பெங்கால் வாரியர்சிடம் 37-48 என்ற கணக்கிலும், பெங்களூர் புல்சிடம் 27-36 என்ற கணக் கிலும் தோற்றது.

5 ஆட்டத்தில் 1 வெற்றி, 4 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி மோதும் 6-வது போட்டி இன்று நடக்கிறது.

சோனிபட்டில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் அணியை சந்திக்கிறது. சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி எழுச்சி பெற்று முன்னேற்றம் காணும் என்று தலைமை பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த விசே‌ஷ பேட்டியில் கூறியதாவது:-

வீரர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததாலும், தொடர்ந்து போட்டிகளில் ஆடியதாலும் தமிழ் தலைவாஸ் அணிக்கு தொடர்ச்சியாக தோல்வி ஏற்பட்டது. மேலும் வீரர்களை மடக்கி பிடிப்பதில் முன்னேறி சென்று மிகவும் அவசரம் காட்டியதாலும் அணிக்கு பாதகமான நிலை ஏற்பட்டது.

எதிர் அணி வீரர்களின் ஆட்டத்திறனை தொடக்கத்திலேயே அறிய முடியாததும் தோல்விக்கு ஒரு காரணமாகும். டேக்கிள் (வீரர்களை மடக்கி பிடித்தல்) செய்வதில் முன்னேற்றம் அடைவது அவசியம். பயிற்சியின்போது வீரர்களின் தவறுகளை சுட்டி காட்டியுள்ளோம்.

இனிவரும் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடி எழுச்சிபெறும். 6 நாள் ஓய்வு வீரர்கள் இடையே புத்துணர்வை அளித்துள்ளது. காயம் காரணமாக சுகேஷ் ஹெக்டே ஆடாதது அணிக்கு பாதிப்பே. இதேபோல சுர்ஜித்சிங் 2-வது ஆட்டத்திலேயே காயம் அடைந்தார்.

ரைடு செய்வதில் சிறந்தவர்களான இந்த இருவரும் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியது பலமே. கேப்டன் அஜய்தாகூர் தனது சிறப்பான ரைடு மூலம் புள்ளிகளை குவித்து வருகிறார். இந்த இருவரும் அவரது நெருக்கடியை குறைப்பார்கள்.

ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்கள் ஒருங்கிணைப்புடன் ஆடி வெற்றியை தேடி தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதிர் அணி வீரர்களை பற்றி தற்போது நன்கு அறிந்து வைத்து இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் தமிழ் தலைவாஸ் அணி விளையாடும். தொடர் தோல்வியில் இருந்து மீண்டு இனி வரும் ஆட்டங்களில் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

இவ்வாறு பயிற்சியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Tags: sports news