புரோ கபடி – 2 வது தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ்
6-வது புரோ கபடி லீக் திருவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் சென்னையில் நேற்றிரவு அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்சுடன் பலப்பரீட்சை நடத்தியது. தொடக்கத்தில் சற்று ஆதிக்கம் செலுத்திய தமிழ்தலைவாஸ் அணி அதன் பிறகு தனது பிடியை தளரவிட்டது. 8-8 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்த பிறகு தெலுங்கு அணியின் கை மேலோங்கியது. எதிராளியை மடக்கி பிடிக்கும் யுக்தியில் தமிழ் தலைவாசை விட தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
முதல் பாதியில் 17-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணி அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது. இத்தனைக்கும் அந்த அணி இரண்டு முறை ஆல்-அவுட் ஆன போதிலும், அவர்களின் வீறுநடையை தடுக்க முடியவில்லை. முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 28-33 என்ற புள்ளி கணக்கில் பணிந்தது. அதிகபட்சமாக அஜய் தாகூர் (தலைவாஸ்), ராகுல் சவுத்ரி (தெலுங்கு) ஆகியோர் ரைடு மூலம் தலா 9 புள்ளிகள் சேகரித்தனர்.
தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வென்று இருந்த தமிழ் தலைவாஸ் அணி, அடுத்த ஆட்டத்தில் உ.பி. யோத்தாவிடம் தோல்வி அடைந்திருந்தது.
முன்னதாக தபாங் டெல்லி-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் (டை) முடிந்தது. ஒரு கட்டத்தில் 28-24 என்ற கணக்கில் குஜராத் முன்னிலை வகித்த நிலையில் கடைசி 5 நிமிடங்களில் டெல்லி அணியினர் நெருக்கடி கொடுத்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தனர்.
சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் மும்பை-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.