புரோ கபடி லீக் – 5 வெற்றியை பதிவு செய்த தமிழ் தலைவாஸ்
6-வது புரோ கபடி லீக் தொடரில் புனேயில் நேற்று இரவு நடந்த 83-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் 18-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த தமிழ் தலைவாஸ் அணி முடிவில் 31-25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
தமிழ் தலைவாஸ் அணியில் டேக்கிள் மூலம் மஞ்சித் ஷில்லார் 7 புள்ளியும், ரைடு மூலம் அஜய் தாகூர் 7 புள்ளியும் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். 15-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும்.
மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 37-27 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா அணியை தோற்கடித்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஹரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பால்டன் (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.