புரோ கபடி லீக் – பாட்னாவிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்
6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடந்த 74-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 45-27 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை சாய்த்து 7-வது வெற்றியை ருசித்தது. ஒரு கட்டத்தில் 15-16 என்று நெருங்கி வந்த தமிழ் தலைவாஸ் அணி பிற்பாதியில் இரண்டு முறை ஆல்-அவுட் ஆனதால் பின்தங்கி போனது. பாட்னா அணியில் கேப்டன் பர்தீப் நார்வல் ரைடு மூலம் 13 புள்ளிகள் சேர்த்தார்.
இதன் மூலம் தொடக்க லீக்கில் தமிழ் தலைவாசிடம் அடைந்த தோல்விக்கும் அந்த அணி பழிதீர்த்துக் கொண்டது. 13-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 8-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-35 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் யு மும்பாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
இன்றைய ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.