புரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸுக்கு 4வது வெற்றி
12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 72-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ் அணி 27-23 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
தமிழ் தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஜய் தாக்கூர் 8 புள்ளிகளும், சுகேஷ் ஹெட்ஜ் 5 புள்ளிகளும் எடுத்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். இதன் மூலம் ஏற்கனவே தெலுங்கு அணியிடம் 28-33 என்ற புள்ளி கணக்கில் அடைந்த தோல்விக்கு தலைவாஸ் அணி பழிதீர்த்துக் கொண்டது. 12-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 4-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 29-26 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை சாய்த்தது.
இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- யு மும்பா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.