Tamilசெய்திகள்

மத்திய அமைச்சர் அனந்தகுமார் இறப்பு பிரதமர், குடியரசு தலைவர் இரங்கல்

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மத்திய மந்திரி அனந்த குமார் (வயது 59) காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. மத்திய மந்திரி அனந்த குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அனந்தகுமார் மறைவு வருத்தமளிக்கிறது. அனந்தகுமாரின் மறைவு கர்நாடக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். “எனது முக்கிய சகாவும், நண்பருமான அனந்த குமார் மறைந்ததால் மிகவும் துயருற்றேன். மிகச்சிறந்த தலைவர் அவர். இளம் வயதில் அரசியலுக்குள் வந்து, சமூகத்திற்காக விடா முயற்சியுடனும் தயவுடனும் பணியாற்றியவர். தனது நல்ல செயல்களுக்காக அனந்தகுமார் எப்போது நினைவு கூறப்படுவார்.

அனந்தகுமார் மிகச்சிறந்த நிர்வாகி, அமைச்சரவையில் பல்வேறு துறைகளை சிறப்பாக கையாண்டுள்ள அவர், பாஜகவின் மிகப்பெரிய சொத்தாக விளங்கினார். கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக அயராது பாடுபட்டவர் அனந்தகுமார். தனது தொகுதியினர் எப்போது அணுக கூடியவராக அனந்தகுமார் இருந்து வந்தார்” இவ்வாறு தெரிவித்துள்ளார். அனந்தகுமார் மனைவியிடம் தொலைபேசியில் பேசி, அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த சகாவும், எனது நண்பருமான அனந்தகுமார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி சதனாந்த கவுடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எனது நண்பர் அனந்த குமார் மறைவு அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்பட பலர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாஜகவின் தேசியச் செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் அனந்தகுமார் ஆவார். 2014 பாராளுமன்ற தேர்தலில், பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். 1996 முதல் 2014 வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை எம்.பியாக அனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் 2003 ஆம் ஆண்டு அனந்தகுமார் பொறுப்பு வகித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *