Tamilசெய்திகள்

அழைத்தால் பா.ஜ.க கூட்டத்திலும் பங்கேற்பேன் – பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடக எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதில் இருந்து பாரதீய ஜனதா மற்றும் இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக பேசிவருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டை ஆளத்தெரியவில்லை என்றும் விமர்சித்தார். கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

இதனால் அவர் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 3 நாள் மாநாட்டை தொடங்கி வைக்க பிரகாஷ்ராஜை அழைத்து உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரகாஷ்கரத்தை வைத்து இந்த மாநாட்டை தொடங்க முதலில் திட்டமிட்டனர். இப்போது அவருக்கு பதிலாக பிரகாஷ்ராஜை அழைத்ததன் மூலம் கம்யூனிஸ்டு கட்சியில் அவர் சேருவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கு பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. பொதுவான நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்தால் அதில் கலந்துகொண்டு பேசுகிறேன். சமீபத்தில் கர்நாடக விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயத்தின் மறுசீரமைப்பு குறித்து கலந்துரையாடினேன். காங்கிரஸ், பா.ஜனதா கட்சி கூட்டங்களில் கலந்துகொள்ள அழைப்பு வந்தாலும் போவேன்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *