பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் – பொன்.ராதாகிருஷ்ணன்
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள பனக்கள்ளி கிராமத்தில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டதின்கீழ் துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலவாழ்வு மையத்தை ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என தவறான பொய்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணை விலை உயர்வால் தான் எண்ணை நிறுவனங்களால் உயர்த்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு மற்றும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு போதிய அனுபவம் இல்லை என்று கூறி இருக்கிறார் ப.சிதம்பரம். அவர் நிதிமந்திரியாக இருக்கும்போது என்ன ஊழல் செய்தார்? என்று மக்களுக்கு தெரியும். நிர்மலா சீதாராமன் எவ்வாறு பதவியை கையாண்டு வருகிறார்? என்பதும் மக்களுக்கு தெரியும்.
மீண்டும் பழைய முறையில் தேர்தலுக்கு ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என கூறி உள்ளது காங்கிரஸ்! மீண்டும் நாம் காட்டில்போய் வாழ முடியுமா? காட்டுக்குள் போய் வாழ சொல்கிறதா காங்கிரஸ்? நடந்தே காட்டுக்கு செல்ல முடியுமா?
பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் தான் நல்லது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.