X

பா.ஜ.க எந்த கட்சிக்கும் பின்னாள் இருந்து செயல்படவில்லை – பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை ரெயில் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கேள்வி : சபரிமலை கோவிலில் வழிபட பெண்களுக்கு அனுமதி வழங்கி உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து?

பதில் : பாரம்பரியம், பாரம்பரியமாக வழிபாட்டு தலங்களுக்கு என்று முறைகளை கடைபிடித்து வருகிறார்கள். அந்த முறைகள் அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பும் போது இந்த தீர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், ஒரு அதிர்ச்சியையும் அந்த ஆலய பக்தர்களுக்கு உருவாக்கி இருக்கிறது என்று அறிய முடிகிறது.

கேரள தேவசம்போர்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக அறிகிறேன். கோவில்களில் வழிபாட்டு முறைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.

கேள்வி : இந்த விசயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

பதில் : மத்திய அரசு முடிவு செய்ய எதுவுமில்லை. மாநில அரசு தான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி : அ.தி.மு.க. போராட்டத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளாரே…

பதில் : தமிழகம் முழுக்க எந்த அரசியல் விசயமாக இருந்தாலும் பாரதிய ஜனதாவை மையப்படுத்தியே அரசியல் நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. இதை அனைத்து அரசியல் கட்சியினரும் உணர்ந்து இருக்கின்றனர்.

பாரதிய ஜனதா தமிழக அரசியலில் மையப்புள்ளியாக இருந்து வருகிறது. பாராட்டாக இருந்தாலும் சரி, குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி பாரதிய ஜனதாவை தான் சொல்கிறார்கள்.

அ.தி.மு.க.வினர் தி.மு.க. பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறது என்றும், தி.மு.க.வினர் அ.தி.மு.க. பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

நாங்கள் எந்த கட்சிக்கும் பின்னால் இருந்து செயல்படவில்லை. அனைவருக்கும் முன்னோடியாக இருந்து வருகின்றோம்.

கேள்வி : மத்திய அரசு ஊழல் இல்லாத அரசாக இருப்பதாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரபேல் ஊழல் புகார் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் ஜூரம் எப்படி தாக்கும் என்பதை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். குற்றச்சாட்டுகளுக்கு தேவையான விளக்கத்தை துறை அமைச்சர்கள், பாதுகாப்பு துறை மந்திரி அளித்துள்ளனர்.