X

பேட்ட- திரைப்பட விமர்சனம்

‘கபாலி’, ‘காலா’ என்று ரஜினி வித்தியாசம் காட்டினாலும், தங்களுக்கு பிடித்த ரஜினி மிஸ்ஸிங் என்ற ரசிகர்களின் புலம்பலை இந்த ‘பேட்ட’ போக்கியதா இல்லையா, என்பதை பார்ப்போம்.

கல்லூரி ஹாஸ்டல் வார்டன் வேலைக்கு சேரும், ரஜினிகாந்த அந்த கல்லூரியில் படிக்கும் சனந்த் ரெட்டி மீது அக்கறை காட்டுவதோடு, அவருக்கு பாதுகாப்பாகவும் இருக்க, கல்லூரியில் அராஜகம் செய்யும் லோக்கல் ரவுடியின் மகனான பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டியிடம் வால் ஆட்டுகிறார். இதனால் அவரது வாலை ஒட்ட நறுக்கும் ரஜினி, அவரது அப்பாவான ரவுடி நரேனையும் நய்ய புடைகிறார். இதனால், கடுப்பாகும் நரேன் மற்றும் பாபி சிம்ஹா, கல்லூரியின் இறுதி நாளன்று சனந்த் ரெட்டியையும், ரஜினியையும் தாக்க அடியாட்களுடன் ஹாஸ்டலுக்குள் இறங்க, அவர்களுக்கு முன்பாகவே மற்றொரு கும்பல் சனந்த் ரெட்டியை கொலை செய்ய முயற்சிக்கிறது. அதில் இருந்து அவரை காப்பாற்றும் ரஜினிகாந்த், சனந்த் ரெட்டியை கொலை செய்ய முயற்சித்த கும்பலை தேடி உத்தரப்பிரதேசத்துக்கு கிளம்ப, ரஜினிக்கும் சனந்த் ரெட்டிக்கும் என்ன தொடர்பு?, சனந்த் ரெட்டியை கொலை செய்ய முயற்சிப்பவர்கள் யார்?, எதற்காக கொலை செய்ய நினைக்கிறார்கள்? போன்ற கேள்விகளுக்கான விடையும், சனந்த் ரெட்டியை ரஜினி காப்பாற்ற நடத்தும் யுத்தமும் தான், ‘பேட்ட’ படத்தின் கதை.

ரஜினியுடன், சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, பாலிவுட் நடிகர் நவ்சுதீன் சித்திக் என இத்தனை பெரிய நட்சத்திரங்கள் இருக்கும் படத்தின் கதை இத்துணுண்டு தானா! என்று நீங்கள் ஆச்சரிப்படுவது போல, இந்த கதையை, ரஜினியை வைத்து இப்படி சொல்ல முடியும் என்பது மட்டும் அல்ல, ரஜினியை இப்படியும் காட்டலாம், என்று காட்டி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படம் பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

ரஜினிகாந்தின் படங்கள் ஆரம்பிக்கும் போது அவரது பஸ்ட் லுக் போஸ்டரும், அவரது கெட்டப்பும் பெருஷாக பேசப்பட்டாலும், திரையில் அவரை பார்க்கும் போது, பேசிய வாய்கள் அனைத்தும் ஊமையாகிவிடும். ஆனால், இந்த படத்தில், போஸ்டரில் எப்படி இளமையாக இருந்தாரோ அதை போலவே ரஜினிகாந்த் இளமையாக இருக்கிறார். அவரது நடிப்பிலும் இளமை துள்ளுகிறது. அதிலும், படத்தில் வரும் ஆரம்ப பாடலான “மரணமாஸ்…” பாடலில் ரஜினியின் ஆட்டம் நம்மையே ஆட வைத்துவிடுகிறது.

காளி மற்றும் பேட்ட என இரண்டு கெட்டப்புகளில் வந்தாலும், இரண்டிலுமே நடிப்போடு எனர்ஜியையும் சேர்த்து வெளிப்படுத்துபவர், ஆக்‌ஷன் காட்சிகளிலும் ரசிகர்களை திருப்திப்படுத்துவது கூடுதல் சிறப்பு என்றால், சிம்ரனைப் பார்த்ததும் அவர் வெளிப்படுத்தும் அந்த காதலினாலும் இளசுகளை கவர்ந்துவிடுகிறார்.

”சிம்ரன் இஸ் பேக்”, என்று சொல்லும் அளவுக்கு இளமையோடு திரும்பியிருக்கும் சிம்ரன், கல்லூரி மாணவிக்கு அம்மாவாக நடித்தாலும், அவரது காதலிப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பர்பாமன்ஸ் செய்திருக்கிறார். ரஜினியின் மனைவியாக நடித்திருக்கும் திரிஷா, ரஜினியுடன் நடித்துவிட்டோம், என்ற மன நிறைவு பெற்றிருப்பதை தவிர, வேறு எதையும் பெருஷாக செய்துவிடவில்லை.

சசிகுமார், நவுசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என அவர் அவர் தங்களது வேலையை சரியாக செய்திருந்தாலும், விஜய் சேதுபதி தனது வேலையை கவனிக்கும்படி செய்திருக்கிறார். எந்தவிதமான கதாபாத்திரத்திற்கும் சூட்டாகும் விஜய் சேதுபதி, வட மாநிலத்தவர் வேடத்திலும் பொருந்துவது ஆச்சரியம் தான். அசத்துங்க சேது.

அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்றாலும் பத்துடன் பார்க்கும்போது செம எனர்ஜியாக இருக்கிறது. பின்னணி இசையில், ரஜினியின் முந்தைய படங்களில் இடம்பெற்ற பேவரைட் பீஜியம்களை மிக்ஸ் செய்து மிரட்டியிருக்கிறார். திருவின் ஒளிப்பதிவு படத்தின் மற்றொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு மாஸ் காட்டுகிறது. மலைபிரதேச கல்லூரி, மத்திய பிரதேசம், தென் தமிழக கிராமம் என்று மூன்று களங்கள் படத்தில் வந்தாலும், மூன்றிலேமே ஒரே விதமான கலர் டோனை பயன்படுத்தியிருப்பவர், ரஜினி, சிம்ரன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நெருக்கமாகவும் பெரிதும் உழைத்திருக்கிறார்.

சமூக பிரச்சினையை எதிர்த்து குரல் கொடுக்கும் கும்பலுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே நடக்கும் மோதல், காதலால் எழும் கெளரவ பிரச்சினை, கொலை அதை தொடர்ந்து வரும் பழி வாங்குதல், என்று தமிழ் சினிமாவில் ஏற்கனவே பார்த்த கதை தான் என்றாலும், அதற்கு கார்த்திக் சுப்புராஜ் அமைத்த திரைக்கதையும், அதில் ரஜினியை பொருத்திய விதமும் தான் இப்படத்தின் ஹைலைட்.

முதல் பாதிவரை ரஜினி யாராக இருப்பார்? என்ற கேள்வியோடு படம் பார்க்கும் ரசிகர்கள், இரண்டாம் பாதியில் என்ன நடக்கப் போகிறது, என்று எதிர்ப்பார்க்க பிறகு இப்படித்தான் நடக்கும், என்று ஒரு முடிவுக்கு வர, ”ரெகுலர் பார்மட் தான் ஆனால் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்” என்று சொல்லாமல் சொல்லி படத்தை முடித்திருக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுக்கலாம். அதிலும், வட மாநிலங்களில் மாட்டு கறியை வைத்து நடக்கும் கொலைகள் குறித்து நாசுக்காக இப்படத்தில் பேசியிருப்பது போல, தென் மாவட்டங்களின் கெளரவ கொலைகள் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியிருக்கிறார்.

முதல் பாதியில் இருந்த வேகமும், விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் சற்று குறைவு என்றாலும், அதில் சொல்ல வேண்டியதை ஜவ்வாக இழுக்காமல் எவ்வளவு சுருக்கமாக சொல்ல வேண்டுமோ, அவ்வளவு சுருக்கமாக சொல்லியிருக்கும் இயக்குநர் வட மாநிலத்தில் நடைபெறும் துப்பாக்கி சண்டைக்காட்சிகளை சற்று சுருக்கியிருக்கலாம். (பாட்ஷா படத்தின் தாக்கத்தில் இருந்து, இந்த ரஜினி ரசிகர்கள் மீளவில்லை போல)

ரஜினி படங்கள் என்றாலே அவர் மட்டுமே ஜொலிப்பார் என்பதை தாண்டி, பல கதாபாத்திரங்களை அவருடன் சேர்த்து ஜொலிக்க வைக்கும் திரைப்படங்கள் வரிசையில், இந்த படமும் இருந்தாலும், இது சற்று கூடுதல் ஸ்பெஷலாக இருப்பது ரஜினியின் லுக் அண்ட் நடிப்பு தான். அது எந்த இடத்திலும் மிஸ்ஸாகமல் பார்த்துக்கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ‘பாட்ஷா’ வுக்கு பிறகு ரஜினியை அதிரடியாக காட்டியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

ரஜினி பேசும் வசனங்கள் இயல்பாக இருந்தாலும் அதில் ஒருவித ஈர்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது. அதேபோல், பாபி சிம்ஹா, அவரது அப்பா நரேன், நவுசுதீன் சித்திக் என வில்லன்களை ரஜினி மிரட்டும் தோனிலும், பேசும் வசனங்களும், வெளிப்படுத்தும் விவேகமும் ரசிகர்கள் உற்சாகப்படுத்துகிறது.

மொத்தத்தில், தொலைந்து போன சூப்பர் ஸ்டாரை மீட்டெடுத்திருக்கிறது இந்த ‘பேட்ட’.

-ஜெ.சுகுமார்