தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – இன்றும் விலை உயர்ந்தது
பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருதல், கச்சா எண்ணெய் உற்பத்தி சற்று குறைதல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாலும் இந்த விலை உயர்வு ஏற்படுகிறது.
மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படும் என சமீபத்தில் அறிவித்ததை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த தொடங்கியுள்ளன.
சென்னையில் நேற்று பெட்ரோல் ரூ.85.26-க்கும், டீசல் ரூ.78.04-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அதன்படி, பெட்ரோல் விலையில் 24 காசுகள் உயர்ந்து, 85.50 ரூபாய்க்கும், டீசல் விலையில் 31 காசுகள் உயர்ந்து 78.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிகரித்து வரும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.