பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் – முதல்வர் நாராயணசாமி பேட்டி
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை காரைக்காலுக்கு வந்தார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கஜா புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல் நாளை பகல் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என்பதால் புதுவை மற்றும் காரைக்காலில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுவையில் இருந்து பேரிடர் மீட்புகுழு காரைக்காலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இன்று காரைக்காலில் அரசு அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளனர். அதிகாரிகள் யாரும் விடுமுறையில் செல்லாமல் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் குடிசை வாழ் மக்கள், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்பட்டால் உடனடியாக ஜெனரேட்டர் மூலம் பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் வரை கடலோர பகுதியில் பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளுதல், பார்வையிட செல்லுதல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும்.
புயல் பாதிப்பின் போது பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள தொலை பேசி எண்கள் மற்றும் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காரைக்காலை அடுத்த திருநாள்ளாற்றில் உள்ள தர்பாரணேஸ்வரர் கோவில் சார்பில் ரூ.75 லட்சத்தில் புணர் அமைக்கபட்ட எம தீர்த்தம் மற்றும் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் கோவில் ஊழியர்களுக்கு கட்டபட்ட குடியிருப்பு மற்றும் கொல்கத்தா பக்தர் ஒருவர் வழங்கிய ரூ.1 கோடியே 50 லட்டசத்தில் கட்டப்பட்ட விருந்தினர் மாளிகை ஆகியவற்றை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கமலகண்ணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.