X

மிரட்டலால் அச்சத்துடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் – பார்வதி வேதனை

மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி. தமிழில் பூ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர்.

மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அந்த நடிகைக்கு ஆதரவாகவும், நடிகர் திலீப்புக்கு எதிராகவும் பார்வதி பேசி வருகிறார். மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்த்த மோகன்லாலையும் கண்டித்தார்.

பார்வதி அளித்துள்ள பேட்டியில், “நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம்.

அதன்பிறகு எனக்கும் அந்த அமைப்பில் இருக்கும் மற்ற நடிகைகளுக்கும் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். பாலிவுட்டில் மீ டூவில் பாலியல் புகார் கூறிவரும் நடிகைகளுக்குகூட படவாய்ப்புகள் அளிக்கின்றனர்.

தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் புதிய படங்களில் அவர்களை ஒப்பந்தம் செய்கின்றார்கள். ஆனால், கேரளாவில் அப்படி இல்லை. இங்கு கதாநாயகர்களை கடவுளாக பார்க்கின்றனர். நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமாக மாறி இருக்கிறது.

அவர்கள் சமூக வலைதளங்களில் எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் கொலை மிரட்டல், பாலியல் மிரட்டல்கள் விடுக்கின்றனர். தினமும் அச்சத்திலேயே இருக்கிறோம். நிறைய வெற்றிப்படங்களில் நடித்துள்ள எனக்கு ஒரு வருடமாக படங்கள் இல்லை” என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.