X

மோகன்லாலை எதிர்த்ததால் வாய்ப்புகளை இழந்து வருகிறேன் – பார்வதி கவலை

தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். பாலியல் புகாரில் சிக்கிய திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்த மோகன்லாலை கண்டித்ததால் அவரது கோபத்துக்கு ஆளானார். மம்முட்டி குறித்தும் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

அதன்பிறகு மோகன்லாலுக்கு பயந்து பார்வதியை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள். இதனால் பார்வதி வருத்ததில் இருக்கிறார். மலையாள பட உலகினர் தன்னை ஓரம் கட்டுவதாக ஏற்கனவே புகார் கூறிய அவர் இப்போது மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து பார்வதி கூறியதாவது:-

“நான் 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். சமீபத்தில் மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடிக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து நியாயம் கேட்டு போராடியதால் என்னை ஓரம் கட்டுகிறார்கள். புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் புறக்கணிக்கிறார்கள். கொலை மிரட்டல் பாலியல் அச்சுறுத்தல்களும் வருகின்றன.

சில நடிகைகள் சினிமாவில் உச்சத்தில் இருந்து பிறகு காணாமல் போய் இருக்கிறார்கள். அதன் காரணம் அந்த நடிகைகளுக்கு மட்டுமே தெரியும். என்னையும் காணாமல் போக வைக்க சிலர் முயற்சிக்கின்றனர். பட வாய்ப்பு இல்லா விட்டால் கடை அல்லது ஓட்டல் திறந்தாவது என்னால் பிழைக்க முடியும். இதற்காக அமைதியாக இருக்க மாட்டேன். பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.”

இவ்வாறு பார்வதி கூறினார்.