X

போலீஸ் துறையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும் – பரமேஸ்வரா கருத்து

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தென் மண்டல போலீஸ் டி.ஜி.பி.க்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டி.ஜி.பி. நீலமணி ராஜூ, தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த டி.ஜி.பி.க்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டை கர்நாடக மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாநாட்டில் பேசியதாவது:

தென் மாநிலங்களை சேர்ந்த போலீஸ் டி.ஜி.பி.க்களின் மாநாடு நடைபெறுவது மிகவும் அவசியமானதாகும். இந்த மாநாடு தென்மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களை குறைக்க பயன் உள்ளதாக இருக்கும். ஏனெனில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் போலீசார் தினம், தினம் புதிய சவால்களை சந்தித்து வருகிறார்கள். அதுபோன்ற புதிய சவால்களை இந்த மாநாட்டில் நடைபெறும் கருத்து பரிமாற்றத்தின் மூலம் எதிர்கொள்ள முடியும். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மாநிலத்தின் எல்லை பகுதிகளில் இருந்து தான் முறைகேடாக பண பரிமாற்றம் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன.

அவ்வாறு பண பரிமாற்றம் நடைபெறுகிறதா? என்பதை ஒவ்வொரு மாநில போலீசாரும் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டியது அவசியமாகும். சமூக வலைதளங்கள் மற்றும் வேறு வழிகளில் இளைஞர்களை தூண்டிவிட்டு பயங்கரவாத செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட வைப்பதை தடுப்பது போலீசாருக்கு இருக்கும் மற்றொரு மிகப் பெரிய சவாலாகும். இத்தகைய சவால்களை போலீசார் திறமையாக கையாள வேண்டும். அந்த சவால்களை திறமையாக சமாளித்து கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.

இந்த மாநாட்டின் மூலம் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற போலீஸ் துறையில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் மற்றும் தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டால், சிறப்பான முறையில் பணியாற்ற முடியும். சட்டவிரோத செயல்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மாநிலங்களுக்கு இடையே உதவிகள் செய்வது அவசியமானதாகும். தற்போது நமது நாட்டில் தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து விட்டது. இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுவது அதிகமாகி விட்டது. இதனை தடுக்கும் விதமாக போலீஸ் துறையிலும் புதிய தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும்.

இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ்காரர்கள், போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே செல்கிறார்கள். அவர்கள் எங்கு ரோந்து பணியில் உள்ளார்கள் என்பதை கண்டறிவதும் தேவையான ஒன்றாகும். இந்த மாநாடு 5 மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது, சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கவும், அவற்றை தடுக்கவும் பயன் உள்ளதாக இருக்கும்.

இவ்வாறு பரமேஸ்வரா கூறினார்.

பின்னர் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா நிருபர்களிடம் கூறுகையில், “கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்களின் மாநாடு பெங்களூருவில் முதல் முறையாக நடந்துள்ளது. போலீஸ் துறையை மேம்படுத்துவது, குற்றங்களை குறைப்பது, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களை சேர்ந்த டி.ஜி.பி.க்களின் மாநாட்டை 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கவும், அதனை சமாளிப்பது குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களிடையே தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த மாநாடு பயன் உள்ளதாக இருக்கும்“ என்றார்.

Tags: south news