ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம் – பாகிஸ்தான் பிரதமர் அதிரடி
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கானை லாகூரில் சமூக ஆர்வலர்கள் நேற்று சந்தித்தனர். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு முன்பு இருந்தவர்கள் பல ஆண்டு காலமாக நாட்டை கொள்ளையடித்து நாசமாக்கிவிட்டனர். அவர்கள் பொது மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.
அதற்கான புதிய சட்டம் இயற்றப்படும். இந்த சட்ட வரைவு விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதில் ஊழல் அரசியல்வாதிகள் பற்றி தகவல் கொடுக்கும் சமூக நல ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அம்சங்களும் இடம் பெறும் என்றார்.
இந்த சட்டம் குறித்து வேறு விளக்கம் எதுவும் அவர் அளிக்கவில்லை.