இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.500 கோடி கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக மோதும் கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

2014-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2015-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே 6 தொடர்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 4 தொடர்களை பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்ததில் அப்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் சஞ்சய் பட்டேல் கையெழுத்திட்டார். ஆனால் மத்திய அரசு அனுமதி அளிக்காததால் பாகிஸ்தானிலோ, பொதுவான இடத்திலோ விளையாட முடியாத நிலை பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.

இதனால் தங்களுக்கு ரூ.500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) புகார் அளித்தது.

பாகிஸ்தானின் புகார் மனு குறித்து ஐசிசி-யின் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தீர்ப்பாயம் நேற்று விசாரணையை தொடங்கியது. மைக்கேல் பெலாப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் இந்த விசாரணை குழுவில் இடம் பெற்று இருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சர்வதேச சட்ட நிபுணர்களை வாதாட நியமித்துள்ளன. அடுத்த விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news