X

நோட்டா- திரைப்பட விமர்சனம்

தமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றமும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் தான் இந்த ‘நோட்டா’ படத்தின் கதை.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழும் அமைச்சர்கள் தொடங்கி, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, தேர்தல் சமயத்தில் பிடிப்பட்ட பல கோடி கொண்ட கண்டய்னர், அதிமுக ஆட்சியில் நடந்த முதல்வர்கள் மாற்றம், கூவத்தூர் கூத்து என தமிழகத்தில் நடந்த அரசியல் கலாட்டக்கள் அனைத்தையும் நம் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் ஆனந்த் சங்கரும், ஷான் கருப்புசாமியும் தற்போதைய அரசியல்வாதிகளை கிழிகிழிவென்று கிழித்துவிட்டார்கள், என்றே சொல்ல வேண்டும்.

நண்பர்களுடன் தனது பிறந்தநாளை உல்லாசமாக கொண்டாடிவிட்டு திரும்பும் முதல்வர் நாசரின் மகனான விஜய் தேவரகொண்டாவை ரவுண்டப் செய்யும் போலீஸார், ”நீங்க தான் அடுத்த சி.எம், அதனால உடனே உங்கள ஐய்யா வீட்டுக்கு அழைத்து வர சொன்னார்” என்று கூற, ஷாக்காகும் விஜய், அரை போதையுடன் கவர்னர் இல்லத்தில் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டதோடு, “நைட் அடித்த சரக்கு தலை வலிக்குது, கொஞ்சம் மோர் கிடைக்குமா” என்று கவர்னரிடம் கேட்டு, அவருக்கு மட்டும் இன்றி நமக்கும் ஷாக் கொடுக்கிறார்.

இப்படி டம்மி முதல்வராகும் விஜய் தேவரகொண்டா, தனது அப்பா ஊழல் வழக்கில் சிறை சென்றதனால் ஏற்படும் கலவரத்தில் தீவைக்கப்பட்ட பேருந்து ஒன்றில் சிறுமி ஒருவர் சிக்கி பலியானதும், கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர எடுக்கும் அதிரடி நடவடிக்கையால் “ரவுடி முதல்வர்” என்ற பட்டத்துடன் படு ஜோராக வலம் வர தொடங்கியதுமே, படத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அதிலும், சில மணி நேரங்களில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட வேண்டிய கட்டாயம், அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய சூழலில் விஜய் தேவரகொண்ட முதல்வராக மட்டும் இன்றி, இளைஞராகவும் செயல்படும் முறை, நாளைய தலைமுறையினர் கையில் தான் சமூகம் என்பதை இயக்குநர் ஆனந்த் சங்கர் ரொம்ப ஷார்ப்பாக புரிய வைத்திருக்கிறார்.

யாருப்பா இந்த ஹீரோ? என்று ஒட்டு மொத்த தமிழக மக்களையும் கேட்க வைக்கும் அளவுக்கு ஆரம்ப படத்திலேயே அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் விஜய் தேவரகொண்ட தனது முக பாவனைகள் மூலமாகவே செண்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

விஜய் தேவரகொண்டாவின் ஆலோசகராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் வரும் சத்யராஜ், தனது இயல்பான நடிப்பின் மூலம் கவர்வது போல, முதல்வராக வரும் நாசரும் தனது எவர்கிரீன் நடிப்பால் அசத்துகிறார். எம்.எஸ்.பாஸ்கர், எதிர்க்கட்சி தலைவரின் மகளாக நடித்திருக்கும் நடிகை, போலீஸ் உயர் அதிகாரி என்று படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன், காட்சிகளில் பிரம்மாண்டத்தை காட்டவில்லை என்றாலும், திரைக்கதைக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் காட்சிகளை உயிரோட்டமாக படமாக்கியிருக்கிறார். பொதுவாக தனது அனைத்துப் படங்களிலும் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், முழுக்க முழுக்க பின்னணி இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொண்ட படம் என்றால் சும்மா விடுவாரா, மனுஷன் டைடில் போடும்போதே தனது திறமையை காட்ட தொடங்கிவிடுகிறார்.

விறுவிறுப்பும் பரப்ரப்பும் மிகுந்த அரசியல் கதை என்றாலும், அதில் மக்களின் செண்டிமெண்ட், அரசியல்வாதிகளின் கையாள் ஆகாத்தனம் போன்றவற்றையும் சொல்லி, அதை மக்கள் புரிந்து ரசிக்கும்படியாக படத்திற்கு கச்சிதமாக கத்திரி போட்ட எடிட்டர் ரேமண்ட் டெரிக் கிரிஸ்டாவையும் பாராட்டியாக வேண்டும்.

சத்யராஜ், நாசர் இடையிலான நட்பு, அவர்களுக்கான பிளாஷ்பேக் படத்திற்கு தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும், அதன் பிறகு வரும், விஜய் தேவரகொண்டாவின் முத்தக்காட்சியை எதிர்க்கட்சியினர் இணையத்தில் பரப்பிவிட, அதற்கு விஜய் தேவரகொண்டா கொடுக்கும் பதிலடி, சத்யராஜின் பிளாஷ்பேக் காட்சியில் சோர்வடைந்த ரசிகர்களை உற்சாகப்படுத்துவதோடு, ஒட்டு மொத்த திரையரங்கையே கைதட்டலால் அதிர வைக்கிறது.

தமிழக அரசியலையும், அரசியல்வாதிகளையும் வாயால் விமர்சனம் செய்யாமல் தனது இயக்கத்தின் மூலம் விமர்சனம் செய்திருக்கும் இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுத்தாலும், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியில் நடந்தவைகளை மட்டுமே அவர் சுட்டிக்காட்டி நையாண்டி செய்திருக்கிறாரோ! என்றும் எண்ணத் தோன்றுகிறது. இருந்தாலும், நாட்டில் எவை அதிகமாக விமர்சிக்கப்பட்டதோ அதையே அவர் கடுமையாக விமர்சித்திருப்பதோடு, ரசிக்கும்படியான ஒரு படமாகவும் கொடுத்திருக்கிறார்.

விஜய், ரஜினி போன்ற முன்னணி ஹீரோக்கள் நடிக்க வேண்டிய ஒரு படம் இது, என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதை அமைப்பும், அதனை சுற்றி வரும் காட்சிகளையும் அத்தனை கட்சிதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில், யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை என்பதனை குறிக்கும் இந்த ‘நோட்டா’ வுக்கு தாராளமாக ஏராளமாக ஓட்டு போடலாம்.

-ஜெ.சுகுமார்