X

ரகசிய விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிர்மலா தேவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது. ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கருப்பசாமி, முருகன் தரப்பில் வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என மனு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி லியாகத் அலி முன்பு நேற்று நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி மற்றும் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆஜரான நிர்மலாதேவி, முருகன் தரப்பு வக்கீல்கள், கற்பழிப்பு வழக்குகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொடர்பான வழக்குகளைத்தான் ரகசியமாக நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகள் ரகசியமாக நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பொருந்தாது. இதற்கு பல தீர்ப்புகள் முன்னுதாரணமாக உள்ளன. ஆனால், அதற்குரிய ஆதாரங்களை கொண்டு வருவதற்கு காலஅவகாசம் வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர்.

இதனையடுத்து நீதிபதி லியாகத் அலி, அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

முன்னதாக கோர்ட்டுக்கு கருப்பசாமியை போலீசார் அழைத்து வந்தபோது, “பத்திரிகையில் வந்த செய்திகள் அனைத்தும் தவறானது. அதை யாரும் நம்ப வேண்டாம். இதை கோர்ட்டில் சட்டப்படி சந்திப்பேன்” என கத்தியபடி சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.