X

ஐபில் போட்டியின் இறுதிப் போட்டி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள் – நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்

2-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு (2019) மார்ச் 23-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 15-ந் தேதிக்குள் இந்த போட்டி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஐ.பி.எல். போட்டி முடிந்ததும், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்குகிறது. இரண்டு போட்டிக்கும் இடையே குறுகிய கால இடைவெளியே இருப்பதால் ஐ.பி.எல். போட்டி தொடரில் இறுதி ஆட்டம் வரை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் விளையாட அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அனுமதி அளிப்பது சந்தேகம் தான் என்று தெரிகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய பொதுமேலாளர் ஜேம்ஸ் வியர் அளித்த சிறப்பு பேட்டியில், ‘அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டி தொடரில் இறுதிப்போட்டி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாட அனுமதி அளிக்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதன் மூலம் நியூசிலாந்து வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியில் எங்கள் நாட்டை சேர்ந்த 11 வீரர்கள் விளையாடினார்கள். அது எங்களுக்கு சிறந்த பலனை அளித்தது. எனவே அவர்கள் தொடர்ந்து விளையாட அனுமதிப்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

மேலும் ஆஸ்திரேலிய போட்டி தொடர் முடிந்ததும், இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 23-ந் தேதி நேப்பியரில் நடக்கிறது. 20 ஓவர் போட்டிகள் இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி தொடங்கும் நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடர் குறித்து நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் அளித்த பேட்டியில், ‘இந்திய அணி கடைசியாக 2014-ம் ஆண்டில் நியூசிலாந்தில் விளையாடியது. அதன் பிறகு இரு அணிகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. நியூசிலாந்தை போன்ற தன்மை கொண்ட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் தற்போதைய இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. எங்களது மைதானங்கள் ரன் குவிப்புக்கு உகந்ததாக இருக்கும். இந்திய அணியில் கேப்டன் விராட்கோலி உள்ளிட்ட சில வீரர்கள் சமீபகாலமாக சிறப்பாக ரன் குவித்து வருகிறார்கள். எனவே இந்த போட்டி தொடரில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் இந்த போட்டி தொடர் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்.