X

யமுனை ஆற்றின் நடுவே கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு! – மக்களின் செல்பி மோகத்தால் ஆபத்து

டெல்லியில் யமுனை ஆற்றின் நடுவே பிரமாண்டமாக கட்டப்பட்ட சிக்னேச்சர் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் தற்போது செல்பி மையமாக மாறி உள்ளது. பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பலர் தங்களை விதவிதமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர். பாலத்தையும் பல்வேறு கோணங்களில் படம்பிடிக்கின்றனர்.

சிலர் ஆர்வக்கோளாறில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டியபடியும், கார்களின் ஜன்னல்களில் ஏறி அமர்ந்தபடியும் செல்பி எடுப்பதை காண முடிகிறது.

1518 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் டெல்லியின் புதிய அடையாளமாக மாறி உள்ளது. பாலத்தின் உச்சியில் பிரமாண்ட கண்ணாடி பெட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பெட்டியில் இருந்து பார்த்தால் நகரின் முழு அழகையும் காண முடியும். இதற்காக லிப்டுகள் மூலம் சுற்றுலாப் பயணிகள், அந்த பெட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். செல்பி எடுப்பதற்கும் இந்த பாலத்தில் தனியாக இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.